மரக்கன்றுகள் நட மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்

இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள் நட வேண்டும் என மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள் என்று ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தினார்.

Update: 2023-06-06 18:45 GMT

கொரடாச்சேரி:

இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள் நட வேண்டும் என மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள் என்று ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தினார்.

மரக்கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொரடாச்சேரி ஒன்றியம் குளிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு குளிக்கரை ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியை அட்சரசுந்தரி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆக்சிஜன் தொழிற்சாலை

இந்த பூமியில் வருங்கால சந்ததியினர் ஆரோக்கியமாக உயிர்வாழ வழிவகை செய்யும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. மரங்களை மனிதர்களோடு உருவகப்படுத்தி மாணவர்களுடன் கலந்துரையாடுங்கள். மரங்களின் மூலம் நாம் ஆக்சிஜனை சுவாசிக்கிறோம். நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடை மரங்கள் சுவாசிக்கின்றன. மாணவர்களிடம் சொல்லுங்கள் நீங்கள் நடுவது மரம் மட்டுமல்ல.

ஒரு ஆக்சிஜன் தொழிற்சாலை. இவ்வாறு மாணவர்களிடம் எடுத்துச்சொல்லி இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள் நட வேண்டும் என்று அவர்களை ஊக்கப்படுத்துங்கள் என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்