ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைப்பதை கண்டித்து போராட்டம் சமூக ஆர்வலர்கள் கூட்டத்தில் தீர்மானம்

ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைப்பதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-12-05 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஏனாதிமங்கலம் கிராமத்தில் சமூக ஆர்வலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் பாதுகாப்பு கழகம் ரமேஷ், தமிழ் இளைஞர் கூட்டமைப்பு கோபு, கால சோழன் பசுமை மீட்பு படை அகிலன், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் நாகராஜன், எழுத்தாளர் செங்குட்டுவன், சமூக ஆர்வலர் முபாரக், ஏனாதிமங்கலம் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்படும். பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு மின் கோபுரங்கள், ரெயில்வே பாலங்களுக்கு அடியில் அமைக்கப்பட்ட காங்கிரீட் வெளியே தெரியும் வகையில் இருப்பது மிகவும் ஆபத்தானது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்வது, மணல் குவாரி அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வது, தென்பெண்ணை ஆறு மீட்புக்குழு ஏனாதிமங்கலம் என்ற அமைப்பை ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்