ஓசியில் மதுபாட்டில் கேட்டு மிரட்டல்: ரவுடிக்கு பயந்து டாஸ்மாக் கடையை மூடிய ஊழியர்கள்

சேலத்தில் ஓசியில் மதுபாட்டில் கேட்டு மிரட்டல் விடுத்த ரவுடிக்கு பயந்து டாஸ்மாக் கடையை ஊழியர்கள் மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-16 22:33 GMT

மதுகேட்டு மிரட்டல்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பால் மார்க்கெட்டிற்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மதுவிற்பனை நடந்து கொண்டிருந்தது. அந்த கடையின் அருகில் உள்ள பாரில் மதுபிரியர்கள் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

இதனால் கடையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, டாஸ்மாக் கடைக்கு மதுபோதையில் ரவுடி ஒருவர் வந்தார். பின்னர் அவர், கடையில் இருந்த ஊழியர்களிடம் பணம் எதுவும் கொடுக்காமல் ஓசியில் மதுபாட்டில் (குவார்ட்டர்) தருமாறு கேட்டு மிரட்டினார்.

அதற்கு பணம் கொடுத்தால் மது தருவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் ஆவேசம் அடைந்த ரவுடி, இந்த ஏரியாவில் நான் மிகப்பெரிய ரவுடி, என்னிடமே காசு கேட்கிறீர்களா? என்று மிரட்டியதோடு டாஸ்மாக் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இந்த ஏரியாவில் டாஸ்மாக் கடையே செயல்பட முடியாது என்றும், கடையை காலி செய்துவிடுவேன் என்றும் கூறினார்.

டாஸ்மாக் கடை மூடல்

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த ஊழியர்கள், அந்த ரவுடிக்கு பயந்து டாஸ்மாக் கடையை உள்புறமாக திடீரென மூடினர். இதனால் மதுபாட்டில் வாங்குவதற்காக வந்த மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த ரவுடியை சிலர் பேசி சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர் யார் பேச்சையும் கேட்காமல் அங்கேயே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதை அறிந்த அந்த ரவுடி நைசாக அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். பின்னர் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அங்கு வந்து நடந்த சம்பவத்தை டாஸ்மாக் ஊழியர்களிடமும், அங்கிருந்த நபர்களிடமும் கேட்டறிந்தனர். கோட்டை பகுதியை சேர்ந்த அந்த ரவுடி, சமீபத்தில் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளதாகவும், அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஓசியில் மதுபாட்டில் கேட்டு மிரட்டிய அந்த ரவுடி, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை மறைத்து வைத்து தாக்கிவிட்டால் என்ன செய்வது? என்பதால் பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடையை மூடியதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஊழியர்கள் புலம்பல்

சேலம் மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு தினமும் ரவுடிகள் வந்து ஓசியில் மதுபாட்டில் கேட்டு ஊழியர்களை மிரட்டும் சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர் கதையாக இருப்பதாக டாஸ்மாக் கடை ஊழியர்கள் புலம்புகின்றனர்.

எனவே, இரவு நேரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மிரட்டல் விடுக்கும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது. சேலத்தில் ஓசியில் மதுபாட்டில் கேட்டு மிரட்டிய ரவுடிக்கு பயந்து டாஸ்மாக் கடையை ஊழியர்கள் சிறிது நேரம் மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்