மின்வாரிய அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கீழ்பென்னாத்தூரில் மின்வாரிய அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கீழ்பென்னாத்தூர்,
கீழ்பென்னாத்தூரில் மின்வாரிய அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கீழ்பென்னாத்தூர் மின்வாரிய அலுவலக நுழைவு வாயில் முன்பு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக்கோரி இன்று ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சி.ஐ.டி.யு. கோட்ட தலைவர் அருள்தாஸ் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மின் வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டமான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
நவீன தொழில்நுட்பத்தின் பெயரால் ஸ்மார்ட் மீட்டரை அறிமுகப்படுத்தி கார்பரேட் நிறுவனம் லாபம் பெற மாநில அரசை நிர்பந்திக்கும் மத்திய அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்.
நிதி சுமை அதிகரிக்கும்
மின்சார சட்ட மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவில் பரிசீலனையில் உள்ளபோது குறுக்கு வழியில் புகுத்த நினைக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம்.
தமிழக அரசின் நிதி நெருக்கடியை காரணம் காட்டி மானியம் அளிப்போம் என்று கூறி, மத்திய அரசின் திட்டத்தை ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அடி பணியக் கூடாது.
இதனால் லட்சம் கோடி கடனில் இருக்கும் மின்சார வாரியத்திற்கு நிதிச் சுமையை அதிகரிக்கும். மேலும் இலவச மின்சாரம், படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு ஆகியவை பறிபோகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் கோரிக்கைகளை குறித்து கோஷமிட்டனர்.
முன்னதாக கோட்ட துணை செயலாளர் பாவேந்தன் வரவேற்று பேசினார். முடிவில் பிரிவு பிரதிநிதி நாராயணன் நன்றி கூறினார்.