மருத்துவம்-மக்கள் நல்வாழ்வு துறையின் ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்
மருத்துவம்-மக்கள் நல்வாழ்வு துறையின் ஊழியர்கள் 2-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் புற ஆதார முறைகளை களைய வேண்டும். 30 ஆண்டுகள் கடந்தும் பதவி உயர்வின்றி பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் பணியாற்றும் அனைத்து பிரிவு ஊழியர்களும் நேற்று முன்தினம் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். அவர்கள் 2-வது நாளாக நேற்றும் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். இன்று (வியாழக்கிழமை) மாவட்ட கலெக்டர் வழியாக முதல்-அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட 4 துறை இயக்குனர்களுக்கும் கோரிக்கை முறையீட்டு மனுவினை வழங்க உள்ளனர்.