கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ஊழியர் தற்கொலை
கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டியில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டியில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரெயில்வே ஊழியர்
கன்னியாகுமரி மகாதானபுரம் நேதாஜி காலனியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது54). இவர் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
சாமிநாதன் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
ரெயிலில் பிணம்
இந்தநிலையில் நேற்று காலையில் சுவாமிநாதன் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் 2-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் வெளிப்புறத்தில் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதைபார்த்த ரெயில்வே ஊழியர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே உறவினர்கள் அங்கு விரைந்து வந்து பிணத்தை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ெதாடர்ந்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்தார்
பின்னர் போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் சாமிநாதன் நேற்றுமுன்தினம் இரவு ரெயில் நிலையத்திற்குள் வருவதும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரெயிலின் ஜன்னல் கம்பியில் வெளிப்புறமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதும் பதிவாகியுள்ளது.
அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். சாமிநாதன் கடந்த ஒரு வாரமாக பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில் நிலையத்தில் ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.