8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம்

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினா்

Update: 2023-05-11 21:26 GMT

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

8 அம்ச கோரிக்கை

ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதிகளை காலதாமதம் இன்றி வெளியிடுதல் மற்றும் விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு அனைத்து வட்டாரங்களிலும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் நிலையிலான அனைத்து பதிவு உயர்வு ஆணைகளையும் காலதாமதம் இன்றி உடனடியாக வெளியிட வேண்டும்.

வளர்ச்சி துறையில் வட்டார உதவி பொறியாளர்கள் தொழில்நுட்ப அங்கீகாரம் வழங்கும் உச்சவரம்பினை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணிகள் பாதிப்பு

அதன்படி நேற்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மாநில அளவில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கலெக்டர் அலுவலகம், மொடக்குறிச்சி, சென்னிமலை, கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, தாளவாடி, கொடுமுடி, டி.என்.பாளையம் உள்பட 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊராட்சி செயலாளர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை மொத்தம் 732 அலுவலர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலுவலர்களின் விடுப்பு போராட்டம் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. இந்த போராட்டம் காரணமாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், குடிநீர் வினியோக பணிகள், அரசு நலத்திட்ட பணிகள் என பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

அந்தியூர்

அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதன்காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் பல்வேறு கோரிக்கைகளுக்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வீட்டுக்கு திரும்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்