ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அவசர சட்டம் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-06-17 07:18 GMT

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் என்ற வண்ணம் பூசும் தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடராஜின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 10 மாதங்களில் நிகழ்ந்துள்ள 24வது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த மூன்றாவது உயிரிழப்பு. ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதையே இது காட்டுகிறது.

ஆன்லைன் சூதாட்டங்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டியது எவ்வளவு அவசியம், இந்த விஷயத்தில் பாமக-வின் நிலைப்பாடும், கோரிக்கைகளும் எவ்வளவு நியாயமானவை என்பதற்கு இந்த நிகழ்வுகளை விட சரியான எடுத்துக்காட்டுகள் தேவையில்லை.

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிறப்பிப்பது குறித்து பரிந்துரைக்க வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அக்குழுவின் அறிக்கையை திட்டமிட்டபடி ஒரு வாரத்திற்குள் பெற்று உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!"

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்