தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் புகுந்த யானைகள் தக்காளி செடிகளை சேதப்படுத்தின.
யானைகள்
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 யானைகள் லக்கசந்திரம் கிராமத்திற்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்தன. இந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து சோலார் வேலியை சேதப்படுத்தினர். தொடர்ந்து யானைகள் வெங்கடேஷ் என்பவரது நிலத்தில் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி செடிகள் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தின.
இந்தநிலையில் நேற்று காலை விவசாயி தோட்டத்திற்கு சென்றபோது யானைகள் தக்காளி மற்றும் சோலார் வேலியை சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளால் சேதமடைந்த தக்காளி செடிகளை பார்வையிட்டனர்.
இழப்பீடு
இதுகுறித்து விவசாயி வெங்கடேஷ் கூறுகையில் யானைகளால் சேதமடைந்த தக்காளிக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வேண்டும் என்று கூறினார். தக்காளி செடிகளை யானைகள் சேதப்படுத்தியது குறித்து தகவல் அறிந்ததும் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சேதமான பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.