ஆசனூர் அருகே லாரியை வழிமறித்து கரும்பை ருசித்த யானை

ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்த யானை, அதில் இருந்த கரும்பை துதிக்கையால் பிடுங்கி ருசித்து தின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-06-24 21:24 GMT

தாளவாடி:

ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்த யானை, அதில் இருந்த கரும்பை துதிக்கையால் பிடுங்கி ருசித்து தின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

10 வனச்சரகங்கள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இதில் தாளவாடி, ஆசனூா் வனப்பகுதி வழியாக தமிழக, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

தாளவாடி பகுதியில் ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து உள்ளனர். தற்போது கரும்பு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அறுவடை செய்யப்படும் கரும்புகள், லாரிகளில் ஏற்றப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் சர்க்கரை ஆலைக்கு வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. பகல் நேரங்களில் கரும்புகள் கொண்டு செல்லப்படும் லாரிகளை வழிமறித்து அதில் உள்ள கரும்புகளை யானைகள் பிடுங்கி தின்பது வாடிக்கையான நிகழ்வுகளாக மாறிவிட்டன.

லாரியை வழிமறித்த யானை

இந்தநிலையில் நேற்று மாலை தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சத்தியமங்கலத்துக்கு புறப்பட்டது. இந்த லாரியானது சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. ஆசனூரை அடுத்து தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே கரும்பு லாரி சென்றபோது காட்டு யானை ஒன்று அங்கு வந்தது. உடனே அந்த யானையானது கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை திடீரென வழிமறித்தபடி நின்றது. யானையை கண்டதும் டிரைவர் அதிர்ச்சி அடைந்து லாரியை அப்படியே நிறுத்தினார்.

கரும்பை பிடுங்கி தின்றது

இதையடுத்து லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரும்பை யானை துதிக்கையால் பிடுங்கி சுவைக்க தொடங்கியது. இதன்காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஆனால் யானையோ எதையும் கண்டுகொள்ளாமல் கரும்ைப பிடுங்கி தின்பதிலேயே குறியாக இருந்தது. டிரைவர் லாரியை விட்டு இறங்காமல் அப்படியே இருந்தார். மேலும் யானையை கண்டதும் வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்களில் வந்த பயணிகள் அதில் இருந்து இறங்கி வேடிக்கை பார்த்தனர். பின்னர் அவர்கள் யானை லாரியில் இருந்து கரும்பை பிடுங்கி தின்னும் காட்சியை தங்களுடைய செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கரும்புகளை தின்று ருசித்த பின் காட்டுயானை அங்கிருந்து நகர்ந்து மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது. வனப்பகுதிக்குள் சென்றதும் கரும்பு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதைத்தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரியை வழிமறித்து யானை கரும்புகளை ருசித்த சம்பவம் வாகனங்களில் வந்தவர்களை சிறிதுநேரம் பரபரப்புக்குள்ளாக்கியது.

Tags:    

மேலும் செய்திகள்