மின்சாரம் தாக்கி யானை சாவு
கல்லிடைக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி யானை இறந்தது.
அம்பை:
கல்லிடைக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி யானை இறந்தது.
வனவிலங்குகள் அட்டகாசம்
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமம் உள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள்.
வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
ஒற்றை யானை
கடந்த 2 மாதங்களாக ஒற்றை யானை அப்பகுதியில் சுற்றித்திரிந்து பனை மரங்களை வேரோடு பிடுங்கியும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் வந்தன. இதுகுறித்த அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். வனத்துறையினரும் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சிங்கம்பட்டி பீட்-2 பொட்டல் சீராங்குளம் பகுதியில் ஒற்றை யானை வந்தது. அந்த யானை அங்குள்ள பனை மரத்தை வேரோடு பிடுங்கி கீழே தள்ளியது. அப்போது, மணிமுத்தாறில் இருந்து பொட்டல் பகுதிக்கு செல்லும் உயர் அழுத்த மின்கம்பி மீது பனை மரம் விழுந்தது.
மின்சாரம் தாக்கி பலி
இதில் மின்கம்பி, பனைமரம் அப்படியே சரிந்து கீழே விழுந்தது. அந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக யானை மிதித்தது. இதில் அந்த யானை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா, அம்பை வனச்சரகர் நித்யா, அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பர்வீர்சிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
வனப்பகுதியில் அடக்கம்
இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா கூறுகையில், 'மின்சாரம் தாக்கி இறந்த யானை 45 வயதுடைய ஆண் யானையாகும். புலிகள் காப்பக டாக்டர் மனோகரன் தலைமையில் யானையின் உடல் பரிசோதனை செய்யப்படும். பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் அதன் உடல் அடக்கம் செய்யப்படும்' என்றார்.
கல்லிடைக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி யானை பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.