நல்லூர் கிராமத்தில் முகாமிட்ட காட்டு யானைகள் ஏரியில் உற்சாக குளியல்-தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்ந்தன

Update: 2023-02-20 18:45 GMT

பாலக்கோடு:

நல்லூர் கிராமத்தில் முகாமிட்ட காட்டு யானைகள், ஏரியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன.

யானைகள் அட்டகாசம்

கர்நாடகா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் தர்மபுரி மாவட்டத்துக்குள் அடிக்கடி புகுந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள ஏரிகளில் தண்ணீர் அதிகமாக உள்ளது. இதனால் கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து நீர்நிலைகளில் முகாமிட்டு வருகின்றன.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கடந்த 2 மாதங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

5 யானைகள் முகாம்

இந்தநிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து இடம்பெயந்த குட்டி யானை உள்பட 5 யானைகள் பாலக்கோடு அருகே உள்ள நல்லூர் கிராமத்துக்குள் புகுந்தன. அவை கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. மேலும் அங்குள்ள ஏரியில் முகாமிட்டன.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே ஏரியில் இறங்கிய யானைகள், தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன. தொடர்ந்து நல்லூர் கிராமத்தில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வனப்பகுதியில் வறட்சி

பொதுவாக கோடைக்காலத்தில் மட்டுமே உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி, கிராமங்களுக்குள் புகுவது வழக்கம். ஆனால் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதாலும், வனப்பகுதியில் வறட்சி நிலவுவதாலும் யானைகள் மட்டுமின்றி, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன. குறிப்பாக தண்ணீர் தேவைக்காகவே வனவிலங்குகள் கிராமங்களுக்குள் படையெடுக்கின்றன.

இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்