கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறி பயிர்களை நாசம் செய்யும் காட்டு யானை; விவசாயிகள் வேதனை

கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானை பயிர்களை நாசமாக்குவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2023-05-16 22:01 GMT

டி.என்.பாளையம்

கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானை பயிர்களை நாசமாக்குவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வெளியேறும் யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட 10 வனச்சரகங்களில் ஏராளமான காட்டுயானைகள் காணப்படுகின்றன. தற்போது கொளுத்தும் கோடையால் வனப்பகுதி காய்ந்து கிடக்கிறது. இதனால் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி யானைகள் அடிக்கடி காட்டை விட்டு வெளியேறி வருகின்றன.

அவ்வாறு வெளியேறும் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்ட முயன்றால் தாக்குவதற்காக துரத்துகின்றன.

விவசாயிகள் வேதனை

இந்தநிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள கடம்பூர் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் ஒரு காட்டுயானை செங்காடு, பூதிக்காடு, ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.

இரவு-பகல் பாராமல் எப்போது இந்த யானை வெளியேறும் என்று தெரியாமல் விவசாயிகள் அச்சத்தில் உள்ளார்கள்.

இதுவரை ஏக்கர் கணக்கில் சோளம், வாழை உள்ளிட்ட பயிர்களை யானை சேதம் செய்துவிட்டது என்று விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள். கடந்த 13-ந் தேதி அத்தியூர் பகுதியில் புகுந்த இந்த யானை ஒரு கொட்டகையை முட்டி தள்ளி சேதப்படுத்தியது.

கருப்பனை போல்...

இதற்கிடையே நேற்று மாலை கடம்பூரை அடுத்த எக்கத்தூர் பகுதியில் வெள்ளையப்பன் என்பவருடைய தோட்டத்தில் புகுந்த காட்டுயானை தென்னை மரம், பாக்கு மரங்களை சேதப்படுத்தியது. சில நாட்களுக்கு முன் தாளவாடி பகுதியில் கருப்பன் என்ற காட்டு யானை தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது போல் டி.என்.பாளையம்பகுதியில் இந்த யானை அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. எனவே கடம்பூர் மலைப்பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டுயானையை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்