உணவு, தண்ணீர் தேடி சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்; வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தல்

உணவு, தண்ணீர் தேடி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி காட்டு யானைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. எனவே வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Update: 2023-04-08 20:42 GMT

தாளவாடி

உணவு, தண்ணீர் தேடி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி காட்டு யானைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. எனவே வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சுற்றித்திரியும் காட்டு யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்கள் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதன் வழியாக யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம்.

லாரிகளில் ஏற்றி செல்லும் கரும்புகளை டிரைவர்கள் ரோட்டில் வீசி செல்வது வழக்கம். அந்த கரும்புகளை தின்பதற்காக கடந்த சில மாதங்களாக யானைகள் குட்டியுடன் சாலையில் சுற்றி வருவதும், வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

காட்டு யானை நடமாட்டம்

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த யானை ஆசனூர்-திம்பம் சாலைக்கு வந்தது. ரோட்டில் அங்கும் இங்கும் யானை நடமாடி வந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். ஒரு சிலர் தங்கள் செல்போன்களில் யானையை புகைப்படம் எடுத்தனர்.

சுமார் 10 நிமிடத்துக்கு பிறகு யானை ரோட்டின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்கு சென்றது. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினர் கூறும்போது, 'கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் உணவு, தண்ணீருக்காக சாலையை கடந்து செல்கின்றன. எனவே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை மெதுவாக இயக்க வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்