அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்; பட்டாசு வெடித்து விவசாயிகள் விரட்டிவிட்டனர்

அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டு

Update: 2023-03-16 21:17 GMT

அந்தியூர்

அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டு யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விவசாயிகள் விரட்டிவிட்டனர்.

காட்டு யானை

அந்தியூர் வனப்பகுதியில் ஏராளமான யானை, மான், சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் புகுந்து அங்குள்ள பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

அதேபோல நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறியது. பின்னர் அந்த யானை வனப்பகுதியையொட்டிய அந்தியூர் புதுக்காடு கோட்டை மலையான் கோவில் பகுதியில் உள்ள குருசாமி என்பவரது தென்னந்தோப்புக்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள தென்னைமரங்களின் குருத்துகளை தின்றும், மரங்களை மிதித்தும் நாசப்படுத்தியது.

பட்டாசு வெடித்தனர்

இதை பார்த்து அப்பகுதியில் உள்ள நாய்கள் குரைத்தன. சத்தம் கேட்டு வீட்டில் இருந்த குருசாமி வெளியே வந்து பார்த்தார். அப்போது காட்டு யானை நின்று கொண்டு தென்னை மரங்களை சேதப்படுத்திக்கொண்டிருந்தன. உடனே இதுபற்றி அவா் அக்கம்பக்கத்து தோட்டத்து விவசாயிகளிடம் கூறினார்.

அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு திரண்டனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்தும், தகர டப்பாக்களில் ஒலி எழுப்பியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வனப்பகுதிக்குள் சென்றது

சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்றது. செல்லும் வழியில் யானை அருகே உள்ள 2 தோட்டங்களில் இருந்த தென்னை மரங்களையும் நாசப்படுத்தியது. மொத்தம் 3 தோட்டங்களிலும் 10 தென்னை மரங்கள் சேதமானது.

கோடை காலங்களில் யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. எனவே தோட்டத்தை சுற்றி வனத்துறையினர் அகழி அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்