தாளவாடி அருகே தோட்டத்தில் சுற்றி திரிந்த ஒற்றை யானை- வனப்பகுதிக்குள் விவசாயிகள் விரட்டி விட்டனர்
தாளவாடி அருகே தோட்டத்தில் சுற்றி திரிந்த ஒற்றை யானை- வனப்பகுதிக்குள் விவசாயிகள் விரட்டி விட்டனர்
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் தாளவாடி வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் அந்த யானை சேஷன்நகர் பகுதியில் உள்ள மானாவாரி நிலத்தில் புகுந்து அங்கும், இங்கும் சுற்றித்திரிந்தது. இதை பார்த்த அருகே உள்ள வாழை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அதிா்ச்சி அடைந்தனர். உடனே அலறியடித்துக்கொண்டு தோட்டத்தை விட்டு ஓடினார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்த பகுதி விவசாயிகள் அனைவரும் அங்கு ஒன்று திரண்டனர். பின்னர் சத்தம் போட்டு யானையை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'யானைகள் விவசாய தோட்டத்தில் புகாதவாறு வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும்' என்றனர்.