தாளவாடி அருகே 2-வது நாளாக கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முடியாமல் திணறும் மருத்துவ குழுவினர்- பசுமாட்டை தந்தத்தால் குத்திவிட்டு காட்டுக்குள் சென்றது
தாளவாடி அருகே 2-வது நாளாக கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முடியாமல் மருத்துவ குழுவினர் திணறுகிறார்கள். பசுமாட்டை தந்தத்தால் குத்திவிட்டு கருப்பன் யானை காட்டுக்குள் சென்றது.
தாளவாடி
தாளவாடி அருகே 2-வது நாளாக கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முடியாமல் மருத்துவ குழுவினர் திணறுகிறார்கள். பசுமாட்டை தந்தத்தால் குத்திவிட்டு கருப்பன் யானை காட்டுக்குள் சென்றது.
கருப்பன் யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஜீர்கள்ளி வனப்பகுதியில் வெளியேறும் கருப்பன் என்கிற ஒற்றை யானை, கிராமங்களுக்குள் புகுந்து வாழை, மக்காச்சோளம், கரும்பு, தென்னை உள்ளிட்டவற்றை நாசம் செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் காவலுக்கு இருந்த 2 விவசாயிகளையும் மிதித்து கொன்றுவிட்டது.
தொடர்ந்து நாள்தோறும் பயிர்களை நாசம் செய்வதாலும், பொதுமக்களை துரத்துவதாலும் உடனே கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தார்கள்.
கும்கிகள் வரவழைப்பு
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கருப்பன் யானையை பிடிக்க அரிசி ராஜா, கபில்தேவ், கலீம் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும் வனத்துறையை சேர்ந்த 4 கால்நடை மருத்துவர்கள், 150 வனப் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
வனத்துறையினர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மரியபுரம், ஜோரகாடு, ரங்கசாமி கோவில் வழித்தடத்தில் விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானை வரவில்லை. அதன்பின்னர் நேற்று முன்தினம் இரவு கருப்பன் யானை ஜோரகாடு பகுதிக்கு வராமல் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட மல்குத்திபுரம் பகுதியில் சுற்றியதை வனத்துறையினர் கண்டு பிடித்தனர்.
தந்தத்தால் குத்தியது
உடனே அங்கு சென்ற மருத்துவகுழுவினர், வனத்துறையினர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கருப்பன் யானையை சுற்றி வளைத்தனர். ஆனால் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தமுடியவில்லை. திடீரென மயக்க ஊசி போட வந்திருந்த மருத்துவ குழுவினரையும் கருப்பன் யானை துரத்தியது. உடனே அனைவரும் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினார்கள். இதையடுத்து அங்கிருந்து ஆவேசத்துடன் சென்ற கருப்பன் யானை மல்குத்திபுரம் கிராமத்தில் சென்னஞ்சப்பா என்பவர் வீட்டின் முன்பு கட்டி இருந்த பசுமாட்டை முட்டி தள்ளியது. பின்னர் தந்தத்தால் குத்தியது. இதனால் மாட்டின் குடல் சரிந்து உயிருக்கு போராடி வருகிறது.
இந்தநிலையில் கருப்பன் யானை நேற்று அதிகாலை சிக்கள்ளி வனப்பகுதிக்குள் சென்றது. கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முடியாமல் மருத்துவ குழுவினர் திணறி வருகிறார்கள். எனினும் விரைவில் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து விடுவோம் என்று வனத்துறையினர் கூறினார்கள்.