தாளவாடி பகுதியில் மீண்டும் அட்டகாசம்; கருப்பன் யானையை விரட்ட கும்கி யானை வரவழைப்பு

தாளவாடி பகுதியில் மீண்டும் அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை விரட்ட கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-30 20:48 GMT

தாளவாடி பகுதியில் மீண்டும் அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை விரட்ட கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை கொன்றது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, சிறுத்தை, புலி, மான், காட்டெருமை என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் அவ்வப்போது காட்டை விட்டு வெளியேறி உணவு, தண்ணீர் தேடி விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.

கடந்த ஆண்டு ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. மேலும் தோட்டத்தில் காவலுக்கு இருந்த தர்மாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி மல்லப்பா மற்றும் திகினாரை ஜோராக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி மாதேவா ஆகிய 2 பேரை யானை மிதித்துக் கொன்றது.

கருப்பன் யானை

இதைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து ராஜவர்தன், சின்னத்தம்பி என்ற 2 கும்கி யானைகளை வரவழைத்த வனத்துறையினர் கருப்பன் என்ற பெயரிட்ட அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

இந்தநிலையில் மீண்டும் காட்டை விட்டு வெளியேறிய கருப்பன் யானை கடந்த ஒரு மாதமாக ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட திகினாரை, ஜோராக்காடு, கரளவாடி, மரியபுரம் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம், முட்டைக்கோஸ் பயிர்களை நாசம் செய்து வருகிறது. விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்ட சென்றால் அவர்களையும் துரத்துகிறது.

இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருப்பன் யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் வனத்துறை வாகனத்தை சிறைபிடித்தார்கள்.

கும்கி யானை கபில்தேவ்

இந்தநிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கருப்பன் யானையை விரட்ட கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ் என்ற கும்கி யானை தாளவாடி அருகே உள்ள ஜோராக்காடு என்ற இடத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. கருப்பன் யானை விவசாய தோட்டங்களுக்கு வந்தால் அதை விரட்ட கும்கி யானை கபில்தேவ் தயார் நிலையில் உள்ளது. இதேபோல் ஆசனூர் வனச்சரகத்தில் விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளை விரட்ட கடந்த 10 நாட்களாக சின்னத்தம்பி, ராமு என்ற 2 கும்கி யானைகள் ஏற்கனவே தயார் நிலையில் நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்