தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து வாழைகளை சேதப்படுத்திய ஒற்றை யானை- வீட்டையும் சூறையாடியது

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை வாழைகளை சேதப்படுத்தியது. மேலும் வீட்டையும் சூறையாடியது.

Update: 2022-11-08 21:38 GMT

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை வாழைகளை சேதப்படுத்தியது. மேலும் வீட்டையும் சூறையாடியது.

வாழை தோட்டம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். சில நேரம் ஊருக்குள் புகுந்து வீட்டையும் சேதப்படுத்தி வருவதால் கிராம மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

தாளவாடி அருகே உள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட மரியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மரியசூசை (வயது56). விவசாயி. இவருக்கு வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. இங்கு அவர் 2 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

சேதப்படுத்தியது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் அந்த யானை அருகே உள்ள மரியசூசையின் வாழை தோட்டத்துக்குள் புகுந்தது. அதன்பின்னர் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை குருத்துகளை தின்றும், மரங்களை காலால் மிதித்தும் நாசம் செய்ய தொடங்கின.

யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த மரியசூசை திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் அவர் வெளியே வந்து பார்த்தார். அங்கு யானை நின்று கொண்டு் வாழைகளை சேதப்படுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டையும் சூறையாடியது

இதனால் அவர் சத்தம் போட்டு யானையை விரட்ட முயன்றார். அப்போது ஆவேசமடைந்த யானை அவரை துரத்தியது. இதனால் மரியசூசை பயந்து அங்கிருந்து வீட்டுக்குள் ஓடிச்சென்று உயிர் தப்பினார். அதைத்தொடர்ந்து யானை அவரது வீட்டை சூறையாட தொடங்கியது. வீட்டின் ஓடுகளை துதிக்கையால் பிடித்து இழுத்தது. இதில் ஓடுகள் சரிந்து கீழே விழுந்து உடைந்தது. அதன்பின்னர் யானை தானாக அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

யானையால் சுமார் 50 வாழைகள் சேதமானது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி மரியசூசை கூறும்போது, 'யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்