கர்நாடக மாநிலத்தில் இருந்து ஜவளகிரி வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்த 70 யானைகள்-பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
தேன்கனிக்கோட்டை:
கர்நாடக மாநிலத்தில் இருந்து ஜவளகிரி வனப்பகுதிக்கு 70 யானைகள் இடம் பெயர்ந்துள்ளன. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டு யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி வருவது வழக்கம். அந்த யானைகள் தமிழக எல்லையான ஜவளகிரி மற்றும் தளி வனப்பகுதியில் இடம்பெயரும்.
இந்தநிலையில் நேற்று கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், குட்டிகளுடன் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதிக்குள் நுழைந்தன. இவை பல்வேறு குழுக்களாக பிரிந்து வனப்பகுதியில் சுற்றி திரிகின்றன. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எச்சரிக்கை
70 காட்டு யானைகளும் ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து நொகனூர் மற்றும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை ஓசூர் வனப்பகுதிக்கு செல்வதை தடுத்து, மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் மற்றும் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் வனத்துறையினர் வனப்பகுதியை ஒட்டி உள்ள ஜவளகிரி, படிகநாலம், அகலக்கோட்டை, தேவரபெட்டா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேய்ச்சல்
வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் தனியாக வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் நடமாட வேண்டாம் எனவும் கிராமம், கிராமமாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் விவசாய தோட்டங்களில் பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், காட்டு யானைகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.