கர்நாடகாவில் இருந்து உணவுக்காக தமிழகத்துக்கு வருகின்றன: உயிர் பலி வாங்கும் காட்டு யானைகள்-தொடரும் விபரீதம் தடுக்கப்படுமா?

Update: 2022-09-24 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை ஒட்டிய பகுதியாகும். இந்த மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 30 சதவீதம் வனப்பகுதியாகும். இங்குள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, கரடி, மான், காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி உணவுக்காக வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் படையெடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

யானைகள் அட்டகாசம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி சாலையில் உள்ள கொத்தூர், மரக்கட்டா, நொகனூர், அந்தேவனப்பள்ளி, உச்சனப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் காட்டு யானைகளின் அட்டகாசத்தை சந்தித்து வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை மற்றும் தளி பகுதிகளில் ராகி, தக்காளி, நெல், வாழை, முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்ற பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றை உண்பதற்காகவே கர்நாடக மாநிலத்தில் இருந்து காட்டுயானைகள் கூட்டம் தமிழகத்திற்குள் வருகின்றன.

அவை தேன்கனிக்கோட்டை மற்றும் நொகனூர் வனப்பகுதியில் தஞ்சமடைந்து கிராம பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள தக்காளி, ராகி, நெல், வாழை, முட்டைக்கோஸ், பீன்ஸ் உள்ளிட்ட விளை பயிர்களை நாசமாக்கி செல்கின்றன.

சுட்டுக்கொலை

விளை பயிர்களுக்குள் நுழையும் காட்டு யானைகள் தின்பது 10 சதவீத பயிர்கள் என்றால், கால்களால் 90 சதவீத பயிர்கள் சேதப்படுத்தப்படுகின்றன. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதுதவிர தனியாக வரக்கூடிய யானைகள் பொதுமக்களை தாக்குவதால் உயிர் இழப்புகள் மற்றும் காயம் அடைவதும் தொடர் கதையாகி வருகிறது.

சிலர் காட்டு யானைகளிடம் இருந்து தங்களது பயிர்களை பாதுகாக்க விவசாய நிலங்களை சுற்றி மின்வேலி அமைக்கின்றனர். இதில் சிக்கி யானைகள், காட்டுப்பன்றிகள் உயிரிழக்கின்றன. சில சமயங்களில் மனித உயிர் இழப்புகளும் மின்வேலியால் ஏற்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, விளை பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.

குற்றச்சாட்டு

இதனிடையே யானை உள்ளிட்ட வன விலங்குகளால் சேதமாகும் விளை பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு கொடுப்பதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். லட்சக்கணக்கில் விளை பயிர்கள் நாசமானால் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மட்டுமே இழப்பீடாக கொடுக்கப்படுகிறது. அதற்காக பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து வருவாய்த்துறையிடம் கையெழுத்து பெற்று வருவதற்கே அந்த பணம் போதுமானதாக உள்ளது.

யானை தடுப்பு பள்ளங்கள்

காட்டு யானைகளால் விவசாயிகள் தொடர் இழப்பை சந்தித்து வருவதால் விவசாயத்தை கைவிட்டு விடலாமோ என்ற எண்ணமும் மேலோங்கி வருவதாக விவசாயிகள் புகார் கூறுகிறார்கள். இது போன்ற நிலைகளை தொடர்ந்து சந்தித்து வருவதால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருவதாக கூறுகிறார்கள்.

மேலும் காட்டு யானைகளால் சேதமாகும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதோ, பலியாகும் உயிர்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதோ அந்த குடும்பத்திற்கு போதுமானதாக இருக்காது. எனவே காட்டுயானைகள் நிரந்தரமாக குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், விளை நிலங்களுக்கும் செல்லாதவாறு வேலிகள், யானை தடுப்பு பள்ளங்கள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்பது கிராம மக்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது.

இதனை நிறைவேற்றினால் மட்டுமே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உயிர்களும், பல்லாயிரக்கணக்கானோருக்கு உணவாகும் விளை பயிர்களும் காக்கப்படும்.

மேலும் செய்திகள்