பிரசவத்தின் போது குட்டி ஈன முடியாமல் உயிரிழந்த யானை

தேன்கனிக்கோட்டை அருகே பிரசவத்தின் போது குட்டி ஈன முடியாமல் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2022-08-20 17:29 GMT

தேன்கனிக்கோட்டை அருகே பிரசவத்தின் போது குட்டி ஈன முடியாமல் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

பெண் யானை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்டது பெல்லட்டி பீட். இங்கு தொளுவபெட்டா காப்பு காட்டில் உள்ள தேன்கல்லை பகுதியில் நேற்று வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.

இதுகுறித்து அவர்கள் ஓசூர் வன கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயனிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய தலைமையில் உதவி வன பாதுகாவலர் (வன பாதுகாப்பு) மாரியப்பன், தேன்கனிக்கோட்டை வனசரக அலுவலர் முருகேசன் மற்றும் வன பணியாளர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

பரிதாப சாவு

பின்னர் கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ் தலைமையில் இறந்து போன யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 28 முதல் 30 வயது உள்ள அந்த யானையின் வயிற்றில் குட்டி ஒன்று இறந்த நிலையில் இருந்தது.

மேலும், பிரசவத்தின் போது குட்டியை ஈன முடியாமல் அந்த யானை பரிதாபமாக உயிர் இழந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து வனப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி யானை மற்றும் அதன் குட்டியை வனத்துறையினர் அடக்கம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்