குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினா்

Update: 2023-04-05 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு வெள்ளிக்கேடகத்தில் சண்முகநாதபெருமான், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 30-ந்தேதி சுவாமிக்கும் வள்ளிக்கும் திருக்கல்யாண உற்சவம், மறுநாள் இரவு தங்க ரதத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. 2-ந்தேதி இரவு தெப்பம் நிகழ்ச்சியும், வெள்ளி ரதம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மறுநாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

பங்குனி உத்திர நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மயில் மற்றும் பூக்காவடி எடுத்தல், பால்குடம், அலகு குத்துதல், பூக்குழி இறங்குதல், பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் நடை அதிகாலையிலே திறக்கப்பட்டு குன்றக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பாத யாத்திரையாக குன்றக்குடி கோவிலுக்கு வந்தனர். மேலும் விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல், அரிசி மற்றும் காய்கறிகளை கொண்டு வந்து இடும்பன் சன்னதியில் காணிக்கையாக செலுத்தினர். தொடர்ந்து மயிலாடும் பாறையில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவையொட்டி பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் பணியாளர்கள், ஊராட்சி தலைவர் அலமேலு மங்கை மற்றும் ஊராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர். காரைக்குடி கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்