மின்வாரிய ஊழியர் தற்கொலை முயற்சி
மின்வாரிய ஊழியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
புதுக்கோட்டை காவிரி நகரை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 52). இவர் புதுக்கோட்டை அருகே உள்ள நச்சாந்துபட்டியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தாமரைச்செல்வன் கடந்த மாதம் விடுமுறை எடுத்திருந்ததாகவும், விடுமுறைக்கு பின் கடந்த வாரம் மீண்டும் நச்சாந்துபட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு பணியில் சேர்வதற்காக சென்றபோது அங்கு அவரை பணியில் தொடர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனுமதிக்க மறுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் அலுவலகத்திற்கு சென்று தன்னை பணியில் தொடர அனுமதிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் மீண்டும் அனுமதிக்கவில்லை. இதனால் மனம் உடைந்த தாமரைச்செல்வன் தற்கொலை செய்யும் நோக்கில் விஷப்பாட்டிலை வாங்கி கொண்டு மணிகண்டம் அருகே கீழப்பஞ்சப்பூரில் உள்ள மகள் வீட்டுக்கு பஸ்சில் வந்தார். ஆனால் அவர் மகள் வீடு உள்ள கீழப்பஞ்சப்பூர் பஸ் நிறுத்தத்தில் இறங்காமல் அதற்கு அடுத்த பஸ் நிறுத்தமான செங்குறிச்சி விளக்கு ரோட்டில் இறங்கி விஷத்தை குடித்தார். அங்கு மயங்கி விழுந்து கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.