ஏரியில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள்
செய்யாறு அருகே ஏரியில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
செய்யாறு அருகே ஏரியில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாய்ந்து நிற்கும் மின்கம்பங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து பிரம்மதேசம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் கொண்டு செல்ல கடந்த ஆண்டு புதிதாக மின்பாதை அமைக்கப்பட்டது. அந்த மின்வழிப் பாதையானது சுமார் 1800 ஏக்கர் பாசன பரப்பளவு கொண்ட குத்தனூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி எனப்படும் ஏரியின் மத்தியில் செல்கிறது.
இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்ததில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து நிற்கிறது. கரையோரம் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்டே ஒயரின் பிடிப்பினால் மின்கம்பங்கள் முழுவதுமாக சாயாமல் தண்ணீரை தொட்டுவிடும் அளவிற்கு சாய்ந்து நிற்கிறது.
இதனை சரிசெய்ய கோரி பிரம்மதேசம் துணை மின்நிலைய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தால் ஏரியில் தண்ணீர் வற்றிய பிறகுதான் எதையும் செய்ய முடியும் என அலட்சியமாக பதிலளிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உயிர் சேதம்
இந்த மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்துவிட்டால் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து அவ்வேளையில் ஏரியில் தண்ணீர் அருந்தும் கால்நடைகளோ, ஏரியில் குளிக்கும் மனிதர்களோ மின்சாரம் பாய்ந்து உயிரிழக்க நேரிடும்.
ேமலும் வரும் காலங்களில் மழை பொழிவு அதிகமானால் ஏரியில் நீரின் கொள்ளளவு உயரும் பட்சத்தில் தாழ்வாக உள்ள மின் ஒயர்களில் தண்ணீர்பட்டு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உயிர் சேதங்கள் ஏற்படும் முன் சாய்ந்துள்ள மின்கம்பங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.