பொதுப் பயன்பாட்டுக்கு மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 வசூல் ஆடிப்போன குடியிருப்பு வாசிகள்

பொதுப் பயன்பாட்டுக்கு மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 வசூல் செய்யப்படுவதால் குடியிருப்பு வாசிகள் ஆடிப்போய் உள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள் பற்றி பார்ப்போம்.

Update: 2022-12-08 18:45 GMT

அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் மோட்டார்கள், கார் நிறுத்தம், படிக்கட்டுகள் மற்றும் பொது இடங்களில் எரியும் மின்விளக்குகள், எந்திர 'லிப்ட்'கள் போன்றவைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தைக் காட்டிலும் இது கடுமையாக இருப்பதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.

மின்சாரக் கட்டண உயர்வு

புதிய மின்சாரக் கட்டண உயர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது. நாம் கட்டுகிற மின்சாரக் கட்டணம், நமக்கு அரசு தருகிற மானியம் ஆகியவை மூலமாக தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.65 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. மின்சாரம் கொள்முதல் செய்வது, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவது போன்ற செலவினங்களுக்காக மின்வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.77 ஆயிரம் கோடி தேவைப் படுகிறது.

இவ்வாறு வரவுக்கு மீறி செலவாகி வருவதால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் மின்வாரியம், சற்று அதில் இருந்து மீளுவதற்காக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு மின்சார ஒழுங்கு முறை ஆணையமே முன்வந்து, 15 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. அதன்பின்னர், எந்தவித கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.

தற்போது தமிழகத்தில் புதிய மின் கட்டணத்தை 34 சதவீதம் உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த புதிய மின்கட்டண உயர்வால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணம் கிடையாது. அதற்கு மேல் பதிவாகும் யூனிட்டுகளுக்கு உயர்த்தப்பட்ட இந்த புதிய மின் கட்டணம் பொருந்தும். இதனால் முன்பு இருந்த கட்டணத்தைவிட, குறைந்தது ரூ.100 முதல் ரூ.1,000-க்கு மேல் ஒவ்வொருவரும் அதிகமாகச் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.

அடுக்குமாடி வாசிகள் ஆதங்கம்

இதில் இன்னும் ஒருபடி மேலாக, பொதுப் பயன்பாட்டிற்கு மின் இணைப்பைக் கொண்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு மேலும் அதிர்ச்சிதரும் வகையில் கட்டண உயர்வு அமைந்து இருக்கிறது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கடும் ஆதங்கத்தில் உள்ளனர்.

சென்னை உள்பட மாநிலம் முழுவதும், பல வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட்ட அறை, வாகன நிறுத்தங்கள், 'லிப்ட்', குடிநீர் மோட்டார் பம்ப், 'ஜிம்' போன்ற பொதுப் பயன்பாட்டுக்காக, தனி மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மின் கட்டண உயர்வு வரும் வரை, இதுபோன்ற பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு, வீடுகள் போன்றே ஒரே சீரான மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

வணிக ரீதியிலான கட்டணம்

அதன்படி, முதல் 100 யூனிட் இலவசம். 500 யூனிட் வரை மானியக் கட்டணம் என்ற சலுகைகள் கிடைத்தன. தற்போது இந்த பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு கட்டணச் சலுகை நிறுத்தப்பட்டு, வணிக ரீதியிலான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நிர்ணயித்து இருக்கிறது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புக் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ம், நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு மாதம் ரூ.100-ம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதுவரை பொதுப் பயன்பாட்டிற்கு மின் இணைப்பில் எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் இருந்து வந்த நிலை மாறி, தற்போது வீடுகளுக்கான கட்டணத்துடன் கூடுதலாக இதையும் சேர்த்துச் செலுத்த வேண்டிய நிலைக்கு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வந்து இருக்கிறார்கள். இதில் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் சாதாரண மின் இணைப்புகளைக் கூட பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளாகக் கருதி, ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாயாகக் கணக்கிட்டு பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடும் எதிர்ப்பு

இதற்கு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு, இதற்கு மாற்று ஏற்பாட்டை அரசு செய்து தரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர். பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வசதி படைத்தவர்கள் என்ற மாயை இருக்கிறது. அவர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைப்பது தவறு. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வங்கிக் கடன் பெற்று அதை ஒவ்வொரு மாதமும் கஷ்டப்பட்டு செலுத்திவருபவர்கள் என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.

இந்த கட்டண உயர்வால் அவர்கள் மாதம் மாதம் செலுத்தும் பராமரிப்புச் செலவு கடுமையாக அதிகரித்து அவர்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. இதுபற்றி அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் கூறியதாவது:-

அதிக கட்டணம்

குருநாதர் (தென்கரை, பெரியகுளம்) :- நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன். நான் வசிக்கும் குடியிருப்பில் உப்புத் தண்ணீர் பயன்பாட்டுக்காக தனியாக மின் இணைப்பு உள்ளது. இதற்கு வரும் மின்சார கட்டணத்தை ஒவ்வொரு வீடுகளில் இருப்பவர்களும் பகிர்ந்து செலுத்துகிறோம். இதற்கு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் அதிக அளவில் உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.300 வரை செலுத்தினோம். மின் கட்டண உயர்வால் தற்போது ரூ.900 கட்டணம் செலுத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த மின் இணைப்பையும் வீடுகளுக்கான மின் இணைப்பு திட்டத்தில் சேர்க்க வேண்டும். அல்லது கட்டண நிர்ணயம் அளவை குறைக்க வேண்டும்.

லிங்கேஸ்வரி (இல்லத்தரசி, அல்லிநகரம்):- வாடகை வீடுகளில் வசிக்கும் போது, வீட்டுத் தனிப்பிரிவு கட்டணத்தை அந்தந்த வீடுகளில் வசிப்பவர்கள் நேரடியாக செலுத்துகிறோம். பொதுப் பயன்பாட்டு மின் இணைப்பு கட்டணத்தை அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் பகிர்ந்து கட்டுவது வழக்கமாக உள்ளது. தற்போது மின் கட்டணம் உயர்வு என்பது எங்களைப் போன்று வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களை பாதித்துள்ளது.

அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால், ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில் மின் கட்டணம், கியாஸ் சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும். வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடு கனவு இருக்கும். ஆனால், அதற்கு சேமிக்க வாய்ப்பே இல்லாமல் செலவுகள் அதிகரிக்கிறது. குடியிருப்புகளுக்கான பொது பயன்பாட்டு மின் இணைப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும்.

கூடுதல் பொருளாதார சுமை

பிரியதர்ஷினி (இல்லத்தரசி, அல்லிநகரம்):- குடியிருப்புகளுக்கான பொது பயன் பாட்டுக்கு மின் கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ளவே முடியாது. பெரிய நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் அதன் குடிநீர், அங்குள்ள பொது மின் விளக்குகள் போன்றவற்றின் தேவைக்காக மின்சாரம் பயன்படுத்தப்படும். மற்ற நகரங்களை போன்று தேனி மாவட்டத்தில் பெரிய அளவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கிடையாது. இங்கு இருக்கும் குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு மின் இணைப்பு என்பது குடியிருப்புக்கு பொதுவாக உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் தான் உள்ளது.

தண்ணீர் எடுக்க மட்டும் பயன்படுத்தும் மின் இணைப்பை பொது பயன்பாட்டு மின் இணைப்பாக கருதுவதால் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் அந்த செலவை பகிர்ந்து கொள்கின்றனர். இதனால், நகராட்சிக்கு செலுத்தும் குடிநீர் வரியை விடவும், இந்த மின் கட்டணம் அதிகமாக உள்ளது. தண்ணீர், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினாலும் இந்த கூடுதல் பொருளாதார சுமையை சமாளிக்க முடியாமல் பல குடும்பங்கள் பரிதவிக்க வேண்டியது உள்ளது. எனவே இந்த புதிய நடைமுறையை கைவிட வேண்டும்.

முருகன் (கம்பம்) :- எங்கள் குடியிருப்பில் மொத்தம் 8 வீடுகள் உள்ளன. வீடுகளுக்கு தனித்தனி மின் இணைப்பு உள்ளன. தண்ணீருக்கான மின் மோட்டார் கட்டணத்தை மட்டும் குடியிருப்பில் உள்ளவர்கள் பகிர்ந்து செலுத்திக் கொள்கிறோம். பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குடியிருப்பு வாசிகளுக்கு பாதிப்பை தான் கொடுக்கிறது.

ஒரு யூனிட்டுக்கு ரூ.8 என்பது எல்லாம் அதிகப்படியானது. அதை ரத்து செய்யலாம். அல்லது அந்த கட்டணத்தை குறைக்கலாம். இப்படி ஒவ்வொரு செலவுகளும் அதிகரித்தால் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடு என்பது கனவாகவே போய்விடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் அல்ல சிறு நகரங்களில்கூட அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகி வருகின்றன. குழுக்களாக வீடுகள் கட்டி வாடகைக்கும் விடுகிறார்கள். இந்த புதிய மின்கட்டண முறையால் அங்கு குடியிருக்கும் வாடகைதாரர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்