மின்சாரம் தாக்கி மின்ஊழியர் சாவு
காளையார்கோவில் அருகே மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
காளையார்கோவில்,
தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியைச் சேர்ந்தவர் பொம்மையன். இவருடைய மகன் வினோத் குமார் (வயது 31). இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில்-கல்லல் சாலையில் சிலையாஊருணி கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி அவர் வேலை பார்த்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அவரது உறவினர்களும் மின்வாரிய ஊழியர் அமைப்பினரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த வினோத் குமாரின் உடலை வாங்க மறுத்து விட்டனர். அவர்கள் வினோத்குமாரின் குடும்பத்திற்கு ரூ,25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாரிசு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட அமைப்பின் மாவட்ட செயலாளர் கருணாநிதி, மாநில பொருளாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவகங்கை தாசில்தார் தங்கமணி மற்றும் போலீசார் அவர்களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். மின்சாரம் தாக்கி பலியான வினோத்குமாருக்கு திருமணமாகி மனைவியும், 2½ வயதில் மகளும், 1½ மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர்.