குளத்தில் பிணமாக மிதந்த எலக்ட்ரீசியன்

கருங்கல் அருகே குளத்தில் பிணமாக மிதந்த எலக்ட்ரீசியன்

Update: 2022-09-06 20:36 GMT

கருங்கல், 

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 65). இவர் கருங்கல் அருகே உள்ள பாலூர் முறம்புவிளை பகுதியில் தனது மகன் சுரேசுடன்(28) தங்கி இருந்தார். இவர்கள் இருவரும் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்த கதிர்வேல் திடீரென காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த சுரேஷ், அவரை அக்கம் பக்கத்தில் தேடி வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலையில் பாலூர் அருகே திப்பிற மலை ஊராட்சிக்கு உட்பட்ட காட்டாற்று குளத்தில் ஒரு ஆண் பிணம் மிதப்பதை பொதுமக்கள் பார்த்து கருங்கல் போலீசாருக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருங்கல் போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், பிணமாக கிடந்தவர், மாயமான கதிர்வேல் என்பது தெரிய வந்தது. பின்னர், போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குளத்தின் கரையோரத்தில் நடந்து சென்றபோது நிலைதடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்