கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி திருநீலகண்டர் வீதி வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருடைய மனைவி சுந்தரி (வயது 65). இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்குள்ள மின் மோட்டாரில் இருந்த ஒயரை ஒருவர் அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். இதை கண்டதும், 'திருடன் திருடன்', என சுந்தரி சத்தம் போட்டு கத்தினார். அவருடைய சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அந்த நபரை பிடித்து கவுந்தப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த ரவிக்குமார் (வயது 28),' என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரவிக்குமாரை போலீசார் கைது செய்தனர்.