அரசு பேருந்து மீது உரசிய மின்கம்பி: மதுரையில் பரபரப்பு

அரசு பேருந்து மீது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியது.

Update: 2024-08-19 04:47 GMT

மதுரை,

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் திருப்பரங்குன்றத்துக்கு சென்றது. திருப்பரங்குன்றம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அரசு பேருந்து மீது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியது. மேலும் அந்தக் கம்பி அறுந்து பேருந்தின் மீது விழுந்தது.

இதை அறிந்த ஒட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தினார். பயணிகள் உடனே இறக்கி விடப்பட்டனர். ஓட்டுநர் சுதாரித்து பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதையடுத்து மாற்று பேருந்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் மின்வாரியத்துக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து மின்கம்பிகளை சீரமைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் பல இடங்களில் இதுபோன்று தாழ்வாக மின்கம்பிகள் செல்வதாக, அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். மதுரையில் அரசு பேருந்து மீது மின்கம்பி உரசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்