ஊர்க்காவல் படை வீரர் மின்சாரம் தாக்கி சாவு
அய்யம்பேட்டை அருகே ஊர்க்காவல் படை வீரர் மின்சாரம் தாக்கி பலியானார்.
அய்யம்பேட்டை,
அய்யம்பேட்டை அருகே ஊர்க்காவல் படை வீரர் மின்சாரம் தாக்கி பலியானார்.
ஊர்க்காவல் படை வீரர்
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள வேம்பக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியவாணி. இவர், வேம்பக்குடி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது கணவர் ஸ்ரீரங்கம். தி.மு.க. ஊராட்சி செயலாளர். இவர்களது மகன் மதன்(வயது 24). ஊர்க்காவல் படை வீரரான இவர் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜீப் டிரைவராகவும் இருந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு மதன் அய்யம்பேட்டை வந்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். இவர் வேம்பக்குடி சமுதாய கூடம் அருகே சென்றபோது திடீரென மழை பெய்ததால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்கு இருந்த சமுதாய கூடத்தின் ஓரமாக நின்று கொண்டிருந்தார்.
மின்சாரம் தாக்கி சாவு
மழை சற்று ஓய்ந்த பிறகு மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் அருகில் இருந்த உயர் கோபுர மின் விளக்கின் கம்பத்தில் பட்டது. அப்போது மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் மதன் மீது பாய்ந்தது.இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.