நெல்லையில் தீப்பிடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டர்

நெல்லையில் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-06-01 19:48 GMT

பேட்டை:

நெல்லையில் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மருந்து விற்பனை பிரதிநிதி

நெல்லை பேட்டை அருகே உள்ள கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் டேனியல் ஆசீர் (வயது 42). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக சமீபத்தில் மின்சார ஸ்கூட்டர் வாங்கி ஓட்டி வந்தார்.

நேற்று காலையில் அவர் தனது வீட்டின் வளாகத்தில் மின்சார ஸ்கூட்டருக்கு மின் இணைப்பு மூலம் சார்ஜ் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

தீப்பிடித்த மின்சார ஸ்கூட்டர்

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த டேனியல் ஆசீர் மின்சார ஸ்கூட்டரின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனாலும் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து அவர் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் முத்தையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, மின் இணைப்பை துண்டித்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் மின்சார ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும்.

பரபரப்பு

நாட்டின் பல்வேறு இடங்களிலும் மின்சார ஸ்கூட்டர்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்த நிலையில், நெல்லையிலும் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்