வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் இன்று தொடங்குகிறது.

Update: 2022-11-08 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு சுருக்க திருத்தப்பணி

விழுப்புரம் மாவட்டத்தில் 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது. இப்பணியின் கீழ் இன்று(புதன்கிழமை) முதல் அடுத்த மாதம்(டிசம்பர்) 8-ந் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், புகைப்பட அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல், பெயர் நீக்கம் செய்தல், குடியிருப்பை மாற்றியதற்கான நடப்பு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை சப்-கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் கொடுத்துக்கொள்ளலாம்.

சிறப்பு முகாம்கள்

மேலும் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர்(தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1,051 வாக்குச்சாவடி அமைவிடங்களில் (1962 வாக்குச்சாவடிகள்) வருகிற 12-ந் தேதி(சனிக்கிழமை), 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 26-ந் தேதி(சனிக்கிழமை), 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாட்களில் வாக்குச்சாவடியில் பணியில் இருக்கும் வாக்குச்சாவடி நியமன அலுவலரிடம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய படிவத்தில் கோரிக்கை மனுக்களை வாக்காளர்கள் கொடுக்கலாம்.

வாக்காளர் சேவை மையம்

படிவம் 6-ல் பெயர் சேர்த்தலுக்கான படிவத்துடன் வயதிற்கான ஆதாரமாக பிறப்புச்சான்று அல்லது கல்லூரி, பள்ளி மாற்றுச்சான்றிதழ், இருப்பிடத்திற்கு ஆதாரமாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடத்தை குறிக்கும் முகவரி உள்ள ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தக நகல் இவைகளின் ஏதேனும் ஒரு ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் (https://www.nvsp.in/) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள், வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில், வேலை நேரங்களில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண் 1950-ஐ தொடர்புகொண்டு தேவையான விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள், இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்