வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்; கலெக்டர் ஆய்வு
நாகர்கோவிலில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியல்
குமரி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதல் படி 1-1-2023-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நேற்று நடந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் நடந்த இந்த சிறப்பு முகாமில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் அளித்தனர். மேலும் பெயர் நீக்கம், தொகுதி மற்றும் முகவரி மாற்றம், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பான பணிகளும் நடந்தன.
அதே சமயத்தில் 1-4-2023, 1-7-2023 மற்றும் 1-10-2023 ஆகிய தினங்களை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடையும் இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பொருட்டு முன்னதாக பதிவு செய்யவும் முகாமில் கலந்து கொண்டு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்கினர்.
கலெக்டர் ஆய்வு
இதற்கிடையே நாகர்கோவில் இந்து கல்லூரி மற்றும் செட்டிக்குளம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த முகாமுக்கு கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், "வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை அதிகளவில் இணைப்பதற்கான நடவடிக்கையை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். நாளையும் (அதாவது இன்று) வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. எனவே குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
ஆய்வின் போது நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.