கர்நாடக மேல்-சபையில் 3 காலி இடங்களுக்கு வருகிற 30-ந் தேதி தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு வருகிற 30-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.;

Update: 2023-06-06 15:05 GMT

பெங்களூரு,

கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்களாக இருந்த பாபுராவ் சின்சனசூர், ஆர்.சங்கர், லட்சுமண் சவதி ஆகியோர் தங்களின் எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்தனர். அதில் லட்சுமண் சவதி, பாபுராவ் சின்சனசூர் ஆகியோர் காங்கிரசில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர். இதில் லட்சுமண் சவதி, எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுககப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு வருகிற 30-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய 20-ந் தேதி கடைசி நாள் ஆகும். 21-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 23-ந் தேதி கடைசி நாள் ஆகும். போட்டி இருந்தால் 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். அதைத்தொடா்ந்து மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் காங்கிரசுக்கு 2 இடங்களும், பா.ஜனதாவுக்கு ஒரு இடமும் கிடைப்பது உறுதி என்று சொல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்