ஓ.பன்னீர்செல்வம் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்-ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.பேட்டி
திருச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தியதற்கு அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று கட்சியின் அமைப்பு செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம்,
திருச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தியதற்கு அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று கட்சியின் அமைப்பு செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.தெரிவித்தார்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு பொது மக்களுக்கு கோடை காலத்தையொட்டி நீர், மோர் வழங்குதல், புதிய உறுப்பினர் சேர்த்தலுக்கு உரிய விண்ணப்ப படிவம் திரும்பப்பெறுதல், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் கிழக்கு எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பழங்கள், நீர், மோர், சர்பத் ஆகியவற்றை வழங்கினார். இதனையடுத்து புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியை தொடர்ந்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் நடவடிக்கை
திருச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் கொடியை பயன்படுத்தி இருக்கிறாரே தவிர அதை மக்கள் அங்கீகரித்ததாக தெரியவில்லை. அதனால் வழக்கு தொடுக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் ஆணையமே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்.புதிய அமைப்புகள் தொடங்கினால் கூட அவர்களுக்கான அங்கீகாரம் இல்லாமல் போய்விடும்.
பேனா சின்னம் வைப்பதற்காக மத்திய அரசின் மதிப்பீட்டு குழு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. பேனாவை வைக்கணுமா? வைக்க கூடாதா? என்று சொல்வதைவிட, தேவையற்ற ஒன்று. 81 கோடி ரூபாய் என்று சொல்கிறார்கள் அதை செயல்படுத்தும் போது ரூ.120 கோடி செலவாகும். ஏனென்றால் கலைஞர் நூலகத்திற்கு ரூ.80 கோடி என்று சொன்னார்கள். ரூ.34 கோடி கூட்டி விட்டார்கள்.
அதேபோல பேனா சின்னத்திற்கும் தொகைகள் அதிகரிக்க கூடும். இதை பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு செலவிடலாம்.
தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு எழுதக்கூடிய நெப்பு பேனா வழங்கினால் நல்லது என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி உள்ளார். அதை செய்யலாம்.
அ.தி.மு.க. மாநாடு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் இருப்பது நாடு முழுவதும் அறிந்த ஒன்று. சமீபத்தில் கிராம அலுவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.
மதுரையில் வருகின்ற ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி நடைபெறக்கூடிய அ.தி.மு.க. மாநாடு மிகச் சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.