கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1,878 வரைவு வாக்குச்சாவடி பட்டியல்-கலெக்டர் வெளியிட்டார்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1,878 வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டார்.
கிருஷ்ணகிரி:
வரைவு வாக்குச்சாவடி பட்டியல்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1,878 வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திர பானுரெட்டி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுருக்கமுறை திருத்தம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 01.01.2023-ம் நாளை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியலை சுருக்கமுறை திருத்தம் செய்யும் பணி தொடங்க உள்ளது. இதன் முதற்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் 1,500 வாக்காளர்களுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளை பிரித்தல், பழுதடைந்த வாக்குச்சாவடி கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்களுக்கு மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, ஊத்தங்கரை (தனி) தொகுதியில் 287 வாக்குச்சாவடிகளும், பர்கூர் சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடிகளும், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடிகளும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் 310 வாக்குச்சாவடிகளும், ஓசூர் சட்டமன்ற தொகுதியில் 379 வாக்குச்சாவடிகளும், தளி சட்டமன்ற தொகுதியில் 302 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,878 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளன.
இடமாற்றம்
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் 1,500 வாக்காளர்களுக்கு மேற்பட்ட 4 வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு புதிதாக 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதே போன்று பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் 3 வாக்குச்சாவடிகளும், ஓசூர் சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளும் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.
மேலும் இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் மேல்முறையீடுகள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடமோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்திலோ வருகிற 7-ந் தேதிக்குள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி கலெக்டர்கள் சதீஸ்குமார், தேன்மொழி, தேர்தல் தாசில்தார் ஜெய்சங்கர் மற்றும் துணை தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.