விழாவில் பட்டாசு வெடித்ததில் முதியவருக்கு பார்வை இழப்பு- நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

விழாவில் பட்டாசு வெடித்ததில் முதியவருக்கு பார்வை இழப்பு- நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-12 21:19 GMT

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி நகர் பகுதியில் பட்டாசு வெடிக்க நகராட்சி கவுன்சிலர்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த விழாவிற்காக பட்டாசு வெடித்ததில், ஆட்டோவில் சென்ற வி.பெருமாள்பட்டியை சேர்ந்த முத்தையா என்ற முதியவரின் கண்ணில் பட்டாசு துகள் தெறித்து படுகாயம் அடைந்தார். முத்தையாவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் காயம்பட்ட கண்ணுக்கு செல்லும் நரம்புகள் செயலிழந்துள்ளதால் கண் தெரிய வாய்ப்பில்லை என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். பின்னர் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி போலீசார், மானூத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், முத்து ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு வெடிப்பினால் கண் பார்வை இழந்த முதியவர் முத்தையா தனது உறவினர்களுடன், உசிலம்பட்டி நகர் பகுதியில் பட்டாசு வெடிக்க தடை இருந்தும் அமல்படுத்தி நடவடிக்கைகள் எடுக்காத நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும், வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களை கைது செய்ய கோரியும், உரிய இழப்பீடு வழங்க கோரியும் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட முத்தையா மற்றும் அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்