நண்பர்கள் தள்ளி விட்டதில் காயமடைந்த முதியவர் சாவு

குளச்சல் அருகே வாக்குவாதத்தில் நண்பர்கள் கீழே தள்ளிவிட்டதில் காயமடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2023-09-12 22:03 GMT

குளச்சல்:

குளச்சல் அருகே வாக்குவாதத்தில் நண்பர்கள் கீழே தள்ளிவிட்டதில் காயமடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதியவர்

குளச்சல் அருகே உள்ள மேற்கு நெய்யூர் காரவிளையை சேர்ந்தவர் லாசர் (வயது62). இவர் சொந்தமாக சோடா கம்பெனி நடத்தி வந்தார். தற்போது வயது முதிர்வு காரணமாக வீட்டில் இருந்து வந்தார்.

லாசரும் குளச்சல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த செல்லப்பன் (65), கூத்தாவிளையை சேர்ந்த தேவதாஸ் (62) ஆகியோரும் நண்பர்கள் ஆவர்.

இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி இரவு லாசர் குளச்சல் பகுதியில் ஒரு தனியார் பள்ளியின் அருகில் உள்ள டீக்கடை பக்கத்தில் நின்று கொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

கீழே தள்ளினர்

இதில் ஆத்திரமடைந்த செல்லப்பன், தேவதாஸ் ஆகிய 2 பேரும் சேர்ந்து லாசரை கையால் தாக்கி கீழே தள்ளி விட்டனர். இதில் லாசருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் செல்லப்பன், தேவதாஸ் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை வழக்காக மாற்றம்

இந்தநிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பலனின்றி லாசர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்