வறுமையால் வயதான தம்பதி தற்கொலை

திருச்சி உறையூரில் வறுமை காரணமாக வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-02-22 18:32 GMT

திருச்சி உறையூரில் வறுமை காரணமாக வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காலில் எலும்பு முறிவு

திருச்சி உறையூரை அடுத்த பசுமடம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சுந்தரேசன் (வயது 62). இவரது மனைவி வசந்தி (60). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. பெயிண்டராக வேலை செய்து வந்த சுந்தரேசனுக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்தார். அதனால், அன்றாட வீட்டு செலவுக்கும், மருத்துவ செலவுக்கும் பணம் இல்லாமல் அந்த தம்பதி மிகவும் வறுமையில் வாடி வந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதுபற்றி தங்கள் உறவினர்களிடமும் அவர்கள் தெரிவித்து உதவி கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வறுமையால் யாருக்கும் தொந்தரவு கொடுக்க விரும்பாத அந்த தம்பதி, வாழ்க்கையில் விரக்தி அடைந்தனர். இதனால் உயிரை மாய்த்துக்கொள்ள அந்ததம்பதி திட்டமிட்டனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 20-ந்தேதி நள்ளிரவு அந்த தம்பதி வீட்டின் மேற்கூரை கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று முன்தினம் காலை நீண்ட நேரம் ஆகியும் சுந்தரேசன் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி உறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை

உடனே சம்பவ இடத்திற்கு வந்த உறையூர் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, தம்பதி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வசந்தியின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமை காரணமாக தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்