வயதான தம்பதி அடித்துக் கொலை: நகைகள் கொள்ளை

கரூர் அருகே வயதான தம்பதியை அடித்துக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-05-23 00:10 IST

வயதான தம்பதி

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 76). இவரது மனைவி தைலி (71). இந்த தம்பதிக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் தங்கவேல்-தைலி ஆகியோர் கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள ஓடையூர் பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஒரு மாம்பழ தோட்டத்தை 19 ஆண்டுகளுக்கு குத்தைகக்கு எடுத்து அங்கு குடிசை அமைத்து தங்கி தோட்டத்தை பராமரித்து வந்துள்ளனர்.

கீழே தள்ளி விட்டு கொலை

நேற்று முன்தினம் இரவு தங்கவேல்-தைலி ஆகியோர் குடிசையில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது குடிசைக்குள் புகுந்த மர்மநபர்கள் தைலி கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கவேலும், தைலியும் மர்மநபர்களுடன் போராடினர்.

இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் தங்கவேலையும், தைலியையும் அடித்து கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் 2 பேருக்கும் பின் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். மேலும், மர்மநபர்கள் தைலி கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி சங்கிலி, தங்க தோடு, மூக்குத்தி உள்பட 4 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

தடயங்கள் சேகரிப்பு

இந்தநிலையில் நேற்று காலை தோட்டத்தின் உரிமையாளர் சரவணன் அங்கு சென்றுள்ளார். அப்போது தங்கவேலுவும், தைலியும் இறந்து கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தங்கவேலின் மகன் மாயனுக்கும், வாங்கல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மோப்ப நாய் தம்பதியின் உடல்களை மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி சென்று படுத்துக் கொண்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதையடுத்து போலீசார் தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து தம்பதியை கொன்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மாம்பழ தோட்டத்திற்குள் புகுந்து வயதான தம்பதியை கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்