முட்டை விலை 30 காசுகள் சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை நேற்று ஒரே நாளில் 30 காசுகள் சரிவடைந்து 460 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-01-29 18:58 GMT

30 காசுகள் சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 490 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 30 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக வீழ்ச்சி அடைந்து உள்ளது.

தைப்பூசம் நெருங்கி வருவதால் தமிழகத்தில் முட்டை நுகர்வு பொதுமக்கள் இடையே வெகுவாக குறைந்து உள்ளது. இதுவே விலை சரிவுக்கு பிரதான காரணம் எனவும், பிறமண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை குறைந்து வருவதால் அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் கொள்முதல் விலை குறைக்கப்பட்டு வருவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

நுகர்வு குறைந்தது

இது குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.460 காசுகள் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்தாலும், 50 காசுகள் குறைத்து, 410 காசுக்கே வியாபாரிகள் பண்ணைகளில் கொள்முதல் செய்கின்றனர். மேலும் ஐதராபாத் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக சரிந்து உள்ளது.

அவற்றை கருத்தில் கொண்டும், பண்ணைகளில் முட்டை தேக்கம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காகவும், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் வடமாநிலங்களுக்கு, 30 லட்சம் முட்டை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது 10 லட்சம் முட்டைகள் கூட அனுப்பவில்லை. அதேபோல் தமிழகத்தில் தை பூசத்தை முன்னிட்டு, 15 சதவீதம் நுகர்வு சரிந்து உள்ளது. அதன் காரணமாக முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தைப்பூசத்துக்கு பின்னர் நிலைமை சீராகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பண்ணையாளர்கள் கவலை

கறிக்கோழி கிலோ ரூ.90-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.84-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். முட்டை கொள்முதல் விலை கடந்த 5 நாட்களில் மட்டும் 85 காசுகள் சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்