வரும் நாட்களில் முட்டை விலை உயர வாய்ப்பு

பள்ளிகள் விரைவில் திறக்க உள்ளதால் வரும் நாட்களில் முட்டை விலை உயர வாயப்பு உள்ளதாக நாமக்கல்லில் கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் பேட்டியில் கூறி உள்ளாா்.

Update: 2023-05-27 18:45 GMT

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சிங்கராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினரும், சங்கத்தின் கவுரவத் தலைவருமான ஏ.கே.பி.சின்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (என்.இ.சி.சி) முட்டை விற்பனை விலையை மைனஸ் இல்லாமல் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது, தமிழ்நாடு கோழிப் பணியாளர்கள் சங்கம் மூலம் நாள்தோறும் நிர்ணயம் செய்து அறிவித்து வரும் கோழி விலையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும், பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு தற்போது பொறுப்பில் உள்ள சங்க நிர்வாகிகளே அடுத்த 3 ஆண்டுகளுக்கு பொறுப்பில் தொடர்வது என்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முட்டை விலை உயர வாய்ப்பு

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சங்க தலைவர் சிங்கராஜ் கூறியதாவது:-

நாமக்கல் மண்டலத்தில் மைனஸ் இல்லாத தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என்.இ.சி.சி.) முட்டை விற்பனை விலை நடைமுறையில் உள்ளது. அதைத்தொடர்ந்து நடைமுறைப்படுத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல்லில் இருந்து நாள்தோறும் 60 லட்சம் முட்டைகள் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே முட்டை ஏற்றுமதியாகும் வெளிநாடுகளை தவிர, இந்தோனேசியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளது.

மேலும் பள்ளிகளில் திறக்கப்பட்டு சத்துணவுக்கு முட்டை செல்ல உள்ளதால் வரும் நாட்களில், முட்டையின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி 10 சதவீதம் குறைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் துணைத் தலைவர்கள் நாகராஜன், சண்முகம், துணைச் செயலாளர் சசிக்குமார், நிர்வாக இயக்குனர் நித்தியானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்