போலிபில்மூலம் வாகனங்கள் வாங்கிய 13 பேரை கண்டுபிடிக்கும் பணி தீவிரம்
இருசக்கர வாகன ஷோரூமில் போலி பில் மூலம் விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள் வாங்கிய 13 பேரை கண்டுபிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பண மோசடி
காட்பாடியில் இயங்கி வந்த தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் பணியாற்றி வந்த 4 ஊழியர்கள் 2 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு 40 இருசக்கர வாகனங்களை போலி பில் தயாரித்து விற்பனை செய்துள்ளனர். அதற்கான பணத்தை அவர்கள் பெற்று அதை நிறுவனத்தின் கணக்கில் சேர்க்காமல் மோசடியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஊழியர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் விற்பனை செய்த 40 இருசக்கர வாகனத்தில் இதுவரை 22 இருசக்கர வாகனங்கள் வாடிக்கையாளர்களிடமும், 5 வாகனங்கள் சப் டீலர்களிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மீதம் உள்ள 13 வாகனங்கள் யாரிடம் உள்ளது என்பது தெரியவில்லை. அதை போலீசாரால் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. இது வழக்கின் விசாரணைக்கு தடையாக உள்ளது. எனவே அந்த 13 வாகனங்கள் யார் வாங்கியது என்பது குறித்து கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடவடிக்கை
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறுகையில், காட்பாடி இருசக்கர வாகன ஷோரூமில் வாகனங்கள் வாங்கி இதுவரை பதிவு செய்யாமலும், காவல்துறை விசாரணைக்கு வராமலும் உள்ள நபர்கள் உடனடியாக வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் தாங்கள் வாங்கிய இருசக்கர வாகனத்துடன் பணம் செலுத்தியதற்கான ரசீதுகளுடன் விசாரணைக்கு வரவேண்டும். அவ்வாறு வராமல் இருப்பவர்கள், காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.