மானூர் அரசு கல்லூரிக்கு கல்வி உபகரணங்கள்
மானூர் அரசு கல்லூரிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மானூர்:
மானூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு நெல்லை மின்னல் டிரஸ்ட் சார்பில், ரூ.2 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலிகள், பீரோக்கள், ஒலிப்பெருக்கி கருவிகள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. டிரஸ்ட் நிறுவன தலைவர் மில்லத் இஸ்மாயில் தலைமை தாங்கினார். கல்வி உபகரணங்களை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் வழங்க, அவற்றை கல்லூரி முதல்வர் வனஜா பெற்று கொண்டார்.
விழாவில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில், ''மானூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். விரைவில் இக்கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும்'' என்றார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பேசுகையில், ''இக்கல்லூரிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்'' என்றார்.
விழாவில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் மேயர் புவனேஸ்வரி, ம.தி.மு.க. தலைமை செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி, மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா, மானூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், த.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், மாவட்ட காங்கிரஸ் மகளிரணி தலைவி அனீஸ் பாத்திமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.