முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை :ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

முன்னாள் படைவீரர்களின்குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-10-25 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

புதுடெல்லி மத்திய முப்படை வீரர் வாரியம் மூலம் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் பாரத பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகைத் திட்டம் 2023-24-ம் ஆண்டுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். இந்த உதவித் தொகை பெற அலுவலர் பதவிக்கு கீழ் ஜே.சி.ஓ பதவி வரை பணியாற்றிய முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் நடப்பு கல்வி ஆண்டுக்கு உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் "ஆன்லைன்" மூலம் விண்ணப்பிக்கலாம்.

12-ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அல்லது அதற்கு அதிகமாக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்ற, தொழிற்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் 30.11.2023-க்குள் www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் அனைத்து அசல் ஆவணங்களுடன் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்திற்கு நேரில் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனரை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்