ரூ.1 கோடியே 87 லட்சம் கல்விக்கடன் வழங்க ஆணை

சிவகங்கை மாவட்டத்தில் தகுதியுடைய 34 மாணவர்களுக்கு ரூ.1 கோடியே 87 லட்சம் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.;

Update: 2022-11-30 18:45 GMT

திருப்பத்தூர், 

சிவகங்கை மாவட்டத்தில் தகுதியுடைய 34 மாணவர்களுக்கு ரூ.1 கோடியே 87 லட்சம் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.

கல்விக்கடன் முகாம்

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாணவர்களுக்கான கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்விகடன் வழங்கி பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் அனைத்து நலத்திட்டங்களை வழங்கி மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார்.

கல்லூரி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் நடத்த மாவட்ட நிர்வாகத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 12 வட்டாரங்களுக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் அனைத்து வங்கிகள் சார்பில் இந்த கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. முகாமில் அனைத்து வட்டாரங்களிலும் சேர்த்து மொத்தம் 233 மாணவர்கள் கலந்துகொண்டு மொத்தம் ரூ.8.40 கோடி அளவில் கல்விக்கடன் வழங்க வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளது.

எதிர்கால நலன்

அதில் தகுதியுள்ள 34 மாணவர்களுக்கு ரூ.1 கோடியே 87 லட்சம் அளவில் கல்விக்கடன் வழங்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களின் மனுக்கள் மீது மறுபரிசீலனை மேற்கொண்டு உரிய கடனுதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட வங்கிகளை சேர்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மாணவர்களின் நலனை பாதுகாக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், திருப்பத்தூர் யூனியன் தலைவர் சண்முகவடிவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் மற்றும் வங்கி மேலாளர்கள், வங்கியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்