கல்வி மாவட்டம் மறுசீரமைப்பு: சம்பளம் வழங்காததால் ஆசிரியர்கள் பரிதவிப்பு

தேனி மாவட்டத்தில் கல்வி மாவட்டம் மறுசீரமைப்பு காரணமாக சம்பளம் வழங்காததால் ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர்.

Update: 2022-11-05 18:45 GMT

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில் சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதத்துக்கான ஊதியம் கடந்த 31-ந்தேதி அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அதுபோல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் சம்பளம் செலுத்தப்பட்டது. ஆனால், தேனி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலருக்கும் நேற்று 5-ந்தேதி ஆன பிறகும் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் சிலர் கல்வித்துறை அலுவலகங்களில் முறையிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "சமீபத்தில் கல்வி மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டன. அரசு பள்ளிகளுக்கு தனியாகவும், தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு தனித்தனியாகவும் மாவட்ட கல்வி அலுவலகம் என மாற்றப்பட்டது. இதனால், உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் தயார் செய்தல், கருவூலம் மூலம் அவர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் செலுத்துதல் போன்ற வழக்கமான நடைமுறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர்கள் பலரும் வீடு, குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக வங்கிக்கடன் வாங்கி உள்ளனர். பெரும்பாலான வங்கிகள் 5-ந்தேதி கடனுக்கான தவணைத் தொகையை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளும் நடைமுறை உள்ளது. ஆனால், 5-ந்தேதி ஆகியும் சம்பளம் வழங்கப்படாததால் ஆசிரியர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. நாட்களை கடத்தாமல் சம்பளத்தை வழங்க கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்