தமிழ் வழியில் படித்ததற்கான கல்வி சான்றிதழை இ-சேவை மையங்களில் பெறலாம்

தமிழ் வழியில் படித்ததற்கான கல்வி சான்றிதழை இ-சேவை மையங்களில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-12 18:47 GMT

கல்வி சான்றிதழ்

பள்ளிக்கல்வியில் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை (பி.எஸ்.டி.எம்.) இ-சேவை மூலமாக விண்ணப்பிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் வழி கல்வி கற்றமைக்கான ஆதார சான்றிதழ் (பி.எஸ்.டி.எம்.) தற்போது அரசுப்பணிகள் உள்பட கல்லூரி சேர்க்கை வரை இடஒதுக்கீட்டிற்காக கேட்கப்படுகிறது.

மேலும், ஒட்டுமொத்த பள்ளிக்கல்வியை தமிழ் வழியிலேயே முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தனை நாட்களாக இந்த சான்றிதழை பெற வேண்டுமென்றால் பொதுமக்களும், மாணவர்களும் நேரடியாக அவர்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் உரிய ஆவணங்களை காட்டி சரிப்பார்த்து அவர் கையெழுத்திட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

இ-சேவை மையங்கள்

ஆனால், பள்ளிக் கல்வித்துறையின் புதிய அறிவிப்பின்படி இனி நேரடியாக கையால் பூர்த்தி செய்த சான்றிதழை தலைமை ஆசிரியர்கள் வழங்கக்கூடாது. இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த விண்ணப்பங்கள் ஆசிரியர்கள் பயன்படுத்தும் எமிஸ் தளத்தில் காணப்படும். தலைமை ஆசிரியரும் காலம் தாழ்த்தாமல் பதிவேடுகளை சரிபார்த்து விண்ணப்பதாரர் சரியான தகவலை கொடுத்திருக்கிறாரா? என்பதை உறுதி செய்து இ-கையெழுத்திட்டு அந்த சான்றிதழை மீண்டும் அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்து விடுவார்.

விண்ணப்பதாரர் கொடுத்துள்ள தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில் விண்ணப்பத்தை நிராகரிக்கவும் தலைமை ஆசிரியருக்கு உரிமை உண்டு. எனவே பொதுமக்களும், மாணவர்களும் தாங்கள் பள்ளியில் படித்த சரியான ஆண்டு, ஆதார் எண் மற்றும் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி சான்றிதழ்களோடு இ-சேவை மையங்களுக்கு நேரிடையாக சென்று விண்ணப்பித்து தமிழ்வழியில் கல்வி கற்றமைக்கான ஆதார சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்