எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அவரது தரத்தை காட்டுகிறது அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அவரது தரத்தை காட்டுகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Update: 2023-03-14 11:59 GMT

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அவரது தரத்தை காட்டுகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (மற்றும்) தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடத்தினர்.

இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், நலத்திட்ட உதவிகளையும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் ஆகியோர் வழங்கினர்.

பின்னர், அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1,670 காலிப்பணியிடங்கள்

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. முகாமில் திருச்சியை சேர்ந்த 19 நிறுவனங்கள் உள்பட மொத்தம் 27 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த நிறுவனங்களில் 1,670 காலிப்பணியிடங்கள் உள்ளன. முகாமில் 154 பேர் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் முதற்கட்டமாக 15 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக செல்போன்கள் மற்றும் தையல் எந்திரங்கள், 3 சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் எச்3 என்1 என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. மேலும் தொற்று பரவாமல் தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தரம் அவ்வளவுதான்

தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி அவதூறாக பேசிவருவது குறித்து அவரிடம் கருத்து கேட்டபோது, எடப்பாடி பழனிசாமியின் தரம் அவ்வளவு தான் என்பதை காட்டுகிறது. அவர் அப்படிதான் பேசுவார். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மு.க.ஸ்டாலின் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதுபோல் என்னை போன்ற முக்கிய நிர்வாகிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. நீதிமன்றத்தைதான் நாடினோம் என்றார்.

----

Tags:    

மேலும் செய்திகள்